குரு பகவான் - தட்சிணாமூர்த்திக்கு உள்ள வித்தியாசம் என்ன?

குரு பகவான் - தட்சிணாமூர்த்திக்கு உள்ள வித்தியாசம் என்ன?

















சமீப காலமாக கோவில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரிதானா? இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர்.

நவக்கிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.

அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர்.

ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெளிவாகச் சொல்வதானால், வியாழக்கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக சநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார். அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் பிரஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.



ஞானகுரு வேறு, நவக்கிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலங்கள்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானுக்கு அருகில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தஞ்சைக்கு வெகு அருகில் உள்ள திட்டை வசிஷ்டேசுவரர் ஆலயம். இங்கு குருபகவானுக்கு தனி சன்னதிகள் உள்ளன.

இறைவன் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்கிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர்களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான். குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும்.

குருவருள் வேண்டி பரிகாரம் செய்ய விரும்புபவர்கள், வியாழக்கிழமைகளில் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம். கொண்டைக் கடலை நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.

அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். வியாழக்கிழமைதான் என்றில்லை, எந்த நாளிலும் அவரை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்திலும் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்