இக்கோவில் வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும். அன்றைய தினங்களில் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயம்
பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 8 கி.மீ. முன்னதாகவே உள்ளது சிறுவாச்சூர். இங்கு மதுரகாளியம்மன் வடக்குநோக்கி அருள்பாலிக்கிறார்.
வேதங்களில் பழைமையான வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில், 'அதிதி' என்கிற பெண் தெய்வம் பற்றிய குறிப்பு வருகிறது. அதிதியை தேவர்களின் தாய் என்கின்றனர். அன்னை காளி அதிதியாய், ஒரு கிராமத்துக்கு வந்து, அந்த ஊருக்கு அனுகிரகம் செய்து அங்கேயே கோயில்கொண்டு அருள்புரிகிற அற்புதத் தலம் சிறுவாச்சூர். இங்குக் கோயில் கொண்டு அருள்புரிபவள் மதுரகாளியம்மன்.
இந்த ஆலயத்துக்குள் விநாயகரைத் தவிரவேறு தெய்வங்கள் இல்லை. இங்குப் பிரதான நைவேத்தியம் மாவிளக்கு. மாவிளக்கு ஏற்றி வழிபட வேண்டிய எண்ணம் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் மற்ற ஆலயங்களைப் போல மாவாகச் செய்து கொண்டு சென்று மாவிளக்கு இட இங்கு அனுமதியில்லை. அரிசியாகக் கொண்டு சென்று அங்கே இருக்கும் உரலில் இட்டு இடித்து அங்கேயே மாவைத் தயார் செய்து மாவிளக்கிடவேண்டும். பூஜையின் போது நடைபெறும் முதல் தீபாராதனை, செல்லியம்மன் உறையும் மலை நோக்கியே காட்டப்படும். பின்பே மதுரகாளியம்மனுக்குக் காட்டப்படும்.
அன்னை, இங்கு நான்கு அடி உயரத்தில் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியன வற்றைத் தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கிறாள். இடது திருவடியை மடித்து அமர்ந்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றியிருக்கிறாள். ஆதிசங்கரர் இந்தப் பகுதி வழியாக வந்தபோது தாகம் ஏற்பட்டதாகவும் அப்போது மதுரகாளியம்மன் இந்தத் திருவடிவத்தோடு தோற்றமளித்து அங்கே ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த வடிவத்தோடே அன்னை சிலையானாள் என்றும் அந்தச் சிலையையே ஆதிசங்கரர் இங்குப் பிரதிஷ்டை செய்தார் என்றும் சொல்வதுண்டு. மேலும், சதாசிவ பிரம்மேந்திராள் ஶ்ரீசக்கரம் ஒன்றினை இந்தத் தலத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள். வாரத்தில் இருநாள்கள் திறக்கப்படும் இந்த சந்நிதியில் உச்சிகால பூஜை மட்டுமே நடைபெறும். பூஜை நேரத்தில் இரண்டு கோடாங்கிகள் கருவறை மண்டபத்துக்கு வெளியே அருள்வந்து மதுரகாளி மற்றும் செல்லியம்மனின் சரிதத்தைப் பாட்டாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடி முடித்த பிறகுதான் தீபாராதனை நடைபெறுவது வழக்கம்.
மதுரகாளியம்மன் கோயிலுக்கு நேர் வடக்காகச் சோலை முத்தையா ஆலயம் அமைந்துள்ளது. இவரே செல்லியம்மன் மற்றும் மதுரகாளியம்மனின் காவல் தெய்வமாக விளங்குபவர். இவர் அருகிலேயே அகோர வீரபத்திரர் நிற்கிறார்.
ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையன்று மதுரகாளிக்குப் பூச்சொரிதல் விழாவும் பின்னர் அம்மனுக்குக் காப்புக் கட்டி திருவிழாவும் தொடங்கும். 8-ஆம் நாள் திருவிழாவான செவ்வாய் அன்று மாலையில், சுத்துப்பட்டு சனங்களெல்லாம் பெரிய சாமி கோயில் மலையடிவாரத்தில் கூடுவர். அன்று இரவு சிறப்பு பூஜையும் மறுநாள் அதிகாலையில் கடாவெட்டு நடைபெறும். மலைக்கோயில் பூஜைகள் அதோடு நிறைவு பெறும். புதன்கிழமை அன்று, பக்தர்கள் மதுரகாளி வாசலில் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்துவர். வியாழனன்று செல்லியம்மன், பெரியசாமி, மதுரகாளி உள்ளிட்ட தெய்வங்களின் தேர்பவனியும் வெள்ளிக்கிழமையன்று ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். சனிக்கிழமை நடைபெறும் மஞ்சள் நீராட்டுடன் அந்த வருடத்துத் திருவிழா நிறைவடையும்.
இங்கு மாவிளக்கு செலுத்தி அம்மனை வேண்டிக்கொள்ள தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்கின்றனர் பக்தர்கள். திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளவர்கள் அம்மனை தரிசித்து வழிபட விரைவில் குறைகள் நீங்கப் பெறுவர். இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டிக்கொள்ள, காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் என்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் ஏற்படும் என்றும் நம்புகிறார்கள் பக்தர்கள்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
இக்கோவில் வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும். அன்றைய தினங்களில் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். காலை 11.00 மணிக்கு அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவித்து பூஜைகள் நடைபெறுகிறது.
போக்குவரத்து வசதி
பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 8 கி.மீ. முன்னதாகவே உள்ளது சிறுவாச்சூர்.
கோவில் முகவரி
அருள்மிகு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருகோவில்,
சிறுவாச்சூர்,
பெரம்பலூர் மாவட்டம் – 621113
தொலைபேசி எண்: 80565 53356
0 கருத்துகள்